சூரிய குடும்பத்தின் சனி - வியாழன் ஆகிய கோள்கள் பூமியில் மனிதர்களின் பார்வை கோணத்தில் மிகவும் அருகே தோன்றி நேர்க்கோட்டில் இருப்பது போன்ற அரிய வானியல் நிகழ்வு, திங்கட்கிழமை (டிசம்பர் 21) மாலை 6 மணி முதல் 7 மணிவரை நிகழ்ந்தது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், செளதி, இந்தியாவின் பல மாநிலங்களில் இந்த அரிய நிகழ்வை பார்க்க முடிந்ததாக வானியல் ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

இந்தியாவில் சூரிய அஸ்தமனத்தின் தென்மேற்கு திசையில் இந்த அரிய நிகழ்வு தென்பட்டதாக கூறிய வானியல் நிபுணர்கள், அந்தந்த பகுதியில் உள்ள வானிலையைப் பொறுத்து இந்த வானியல் அதிசயத்தை பைனாகுலர் உதவியுடனோ கோளரங்க தொலைநோக்கி மூலமோ பார்க்க முடிந்ததாக தெரிவித்தனர்.

சென்னையில் பிர்லா கோளரங்கம், டெல்லியில் நேரு கோளரங்கம், ஜந்தர் மந்தரில் உள்ள வானியல் கோளரங்கம், பெங்களூருவில் உள்ள ஜவாஹர்லால் நேரு கோளரங்கம் ஆகியவற்றில் இந்த அரிய நிகழ்வை சமூக இடைவெளியுடன் காண்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வானில் 800 ஆண்டுகளுக்குப் பிந்தைய இந்த அரிய நிகழ்வு தொடர்பான பல கேள்விகளுக்கு விடை தருகிறார் அறிவியலாளர் சௌந்தரராஜ பெருமாள். தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மையத்தின் செயல் இயக்குநராக உள்ள இவர் சுமார் 400 ஆண்டுகளுக்குப் பிறகு வானில் நிகழப் போகும் இந்த அதிசயம் குறித்து பிபிசி தமிழிடம் பேசினார். அவரது பேட்டியில் இருந்து:

நம்முடைய பார்வைப் புலம் (Line of sight) இருக்கும் திசையில், இரண்டு மிகப்பெரிய வாயுக் கோள்களான வியாழன் (Jupiter) மற்றும் சனி (Saturn) ஆகியவற்றின் பெரும் ஒருங்கமைவை (Great Conjunction) இந்த வானியல் அதிசயத்தின்போது காண முடியும்.

சாதாரணமாக இந்த இரண்டு கோள்களுக்கு இடையேயான ஒருங்கமைவு, 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் என்றாலும், சுமார் 400 ஆண்டுகளுக்கு முன், சரியாக சொல்ல வேண்டுமானால் 397 ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் இரு கோள்களும் இவ்வளவு நெருக்கத்தில் காட்சியளித்துள்ளன.

அப்போதுதான் இந்த இரண்டு கோள்களின் கோணத் தொலைவு (Angular Distance) புள்ளி ஒரு டிகிரியாக (0.1 Degree) இருந்துள்ளது. இதே அளவு தொலைவிலான பார்வைக் கோண நெருக்கம், டிசம்பர் 21 ஆம் தேதி அமைகிறது.

20 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் ஒருங்கமைவில் இரு கோள்களுக்கு இடையில் தோன்றும் கோணத் தொலைவை ஒப்பிடும்போது இப்போது தோன்றும் ஒருங்கமைவில், இடைவெளி வெறும் பத்தில் ஒரு மடங்குக்கும் குறைவுதான் என்கிறார் சௌந்தரராஜ பெருமாள்.அடுத்து நிகழ்வு?

இது போன்ற நிகழ்வு மீண்டும் எப்போது நடக்கும் என்பது குறித்தும் அவர் பேசினார்.

"இதே போன்ற ஓர் அதிசய நிகழ்வு அடுத்ததாக 2080 ஆம் ஆண்டில் மீண்டும் நடைபெறும் என கணக்கிடப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.