இலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமாக அதிகரித்து வரும் நிலையில் மக்கள் அச்சமடைய தேவையில்லை என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
சில இடங்களில் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டாலும் அது எல்லோருக்கும் பரவும் என்று அர்த்தமில்லை. சிலர் எங்களுக்கு தகவல்களை மறைத்தாலும் நாங்கள் பல விடயங்களை தேடிக் கண்டுபிடித்துள்ளோம். நாங்கள் வைத்தியர்களின் உதவியுடன் பரவலை தடுத்துள்ளோம் என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

இன்று காலை இடம்பெற்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இராணுவ தளபதி இந்தத் தகவல்களை வெளியிட்டார்.


பண்டாரநாயக்க மாவத்தையில் இருந்து சென்றவர்கள் பலர் தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்தே அடையாளம் காணப்பட்டுள்ளனர். நீர்கொழும்பில் இருந்து சென்றோரும் முகாம்களில் அடையாளம் காணப்படுகின்றனர்.

பாடசாலைகள் தனிமைப்படுத்தல் முகாம்களாக மாற்றப்பட மாட்டாதென்று நான் உறுதியாக கூற விரும்புகிறேன். அனைத்து படையினரும் முகாம்களுக்கு அழைக்கப்பட்டுள்ளதால் , அவர்களை ஒரே இடத்தில் தங்க வைக்க முடியாமல் இருப்பதால் சில பாடசாலைகளை கேட்டுள்ளோம்.

பாடசாலைகளை தனிமைப்படுத்தல் முகாம்களாக மாற்ற வேண்டிய எந்தத் தேவையும் இல்லை. அவ்வாறான வதந்திகளை நிராகரிக்கிறேன். தனிமைப்படுத்தல் முகாம்கள் புறம்பாக இருக்கின்றன. அவற்றை நாம் பராமரிப்போம் என இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.