இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 600 ஐ நெருங்குகிறது : 53 சிறுவர்கள்

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 600 ஐ நெருங்குகிறது ! 21 சுகாதார மாவட்டங்களிலும் தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு; 180 பேர் கடற்படையினர் ! 53 சிறுவர்கள் ! பல இடங்கள் தனிமைப்படுத்தலில்

கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை இன்று இரவு 10 மணியாகும் போது 600 ஐ அண்மித்துள்ளது.

இன்று இரவு 10 மணியுடன் நிறைவடைந்த 14 மணி நேரத்தில் 61 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அந்த எண்ணிக்கை 584 ஆக உயர்ந்தது.
இன்னும் நள்ளிரவு நேரத்தில் மேலும் பல  பரிசோதனை முடிவுகள்  வெளிவர இருந்த நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 600 ஐ எட்டலாம் என சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவித்தன.

இன்று அடையாளம் காணப்பட்டிருந்த  தொற்றாளர்களில் பலர் 18 வயதுக்கும் குறைந்த சிறுவர்கள் என தேசிய சிறுவர்  பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதித்த விதானபத்திரண தெரிவித்தார்.
இந் நிலையில் இன்று மாலை 5.30 மணி வரையிலான காலப்பகுதியிஉல் பதிவான தொற்றாளர்களில் 180 பேர் வெலிசறை கடற்படை  முகாமின் கடற்படை வீரர்களாவர் என  கொரோனா பரவலை தடுப்பதற்கான தேசிய நடவடிக்கை மையத்தின் தலைவரும் முப்படைகளின் பதில் தலைமை அதிகாரியும் இராணுவ தளபதியுமான  லெப்டினன் கொமாண்டர் சவேந்திர சில்வா கூறினார்.

‘ இதுவரை வெலிசறை கடற்படை முகாமுடன் தொடர்புபட்ட 180 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதில் 68 பேர் விடுமுறைகளில் வீடுகளில் இருந்த போது, அவ்வந்த பகுதி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டது. ஏனைய 112 வீரர்களுக்கும்  வெலிசறை கடற்படை முகாமில் தொற்று உறுதியாகியுள்ளது. ‘ என லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் தகவல்கள் பிரகாரம், நாட்டில் உள்ள 26 சுகாதார மாவட்டங்களில்,  5 மாவட்டங்கள் தவிர ஏனைய 21 மாவட்டங்களிலும் கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

அம்பாறை, முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி,  நுவரெலியா ஆகிய சுகாதார மாவட்டங்கள் தவிர ஏனைய அனைத்து சுகாதார மாவட்டங்களிலும் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக  சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவிக்கின்றது.

இந் நிலையில் இன்று 10 மணியுடன் நிறைவடைந்த 14 மணி நேரத்தில் மட்டும் மொத்தமாக 61 தொற்றாளர்கள் நாடளாவிய ரீதியில் அடையாளம் காணப்பட்ட நிலையில்,  இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 584 ஆக அதிகரித்திருந்தது.

இன்று பாதிக்கப்பட்ட மேலும் அறுவர்  பூரண குணமடைந்து வீடு திரும்பியதாக தொற்று நோய் தடுப்புப் பிரிவு கூறியது.

அதன்படி இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது.  இந் நிலையில் மேலும் 448 தொற்றாளர்கள் தொடர்ந்தும் அங்கொடை தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலை, வெலிகந்த, முல்லேரியா ஆதார வைத்தியசாலைகள், காத்தான்குடி ஆதார வைத்தியசாலை மற்றும் சிலாபம் – இரணவில் வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அத்துடன் கொரோனா சந்தேகத்தில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையிலும் சடுதியான அதிகரிப்பை அவதானிக்க முடிகின்றது.   கொரோனா தொற்று இருக்கலாம் எனும் சந்தேகத்தில் 295 பேர் நாடளாவிய ரீதியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்கள்   நாடளாவிய ரீதியில் 32 வைத்தியசாலைகளில்  கொரோனா சந்தேகத்தில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் அதிகமானோர் குருணாகல் போதனா வைத்தியசாலையிலேயே சிகிச்சை பெறுகின்றனர். அங்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 43 ஆகும்.

About Microwin

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.